முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டது, அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டுமென, தமிழக அரசு பிறப்பித்த ஆணையை முதலமைச்சரே மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அவர்,
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதை தமிழுணர்வு மிக்க மக்களால் சகித்துக் கொள்ள முடியாது என கூறியுள்ளார். மேலும் அன்னைத் தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ்,
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.