டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியதால் பல்வேறு பகுதிகளும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
அண்டை மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்ட பல காரணங்களால் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் மக்கள் சுவாசிக்கவே சிரமம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலரும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியின் 8 இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலை எனும் 300 முதல் 400 புள்ளிகளைக் கடந்துள்ளதாக காற்றின் தர மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி ஜஹாங்கிர்புரியில் 431 புள்ளிகளும், ஆனந்த் விஹாரியில் 422 புள்ளிகளும், வஜீர்பூரில் 428 புள்ளிகளும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இடங்கள் புகை சூழ்ந்து காணப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.