சேலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மல்லூர், பாலம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் செல்வமணி, என்பவரின் கட்டிடத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலையில் மர்ம நபர்கள் ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி கதவையும், இயந்திரத்தின் தொடுதிரையையும் கல்லால் தாக்கி உடைத்து விட்டு சென்றனர்.
பணத்தை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயற்சித்த நிலையில் அபாய அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏ.டி.எம்., மையத்தை உடைத்தது மல்லூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிநாத் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
அவர் மீது ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஏ.டி.எம்.,களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் . அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.