சூரசம்ஹார நிகழ்வையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் சூரசம்ஹார நிகழ்வு இன்றிரவு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 108 சங்குகள் கொண்டு சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலிலும் இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளது. இதையொட்டி திரளான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், சூரசம்ஹாரத்தை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வருகை தருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோயிலிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக இந்த கோயிலில் இசைக் கச்சேரி நடைபெற்ற நிலையில், மாலை 4 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.