சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 15ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
கார்த்திகை மாதத்தில் ( நவம்பர் 16) சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்வார்கள்.
பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சபரிமலையின் பம்பாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் முதல் கட்டமாக 25 சிறப்பு பஸ்கள் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும். பக்தர்களின் வருகையை பொறுத்து சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படும். நடப்பாண்டுக்கான சிறப்பு பேருந்து இயக்கம் நவம்பர் 15ல் துவங்குகிறது.
இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்று இரவு துவங்கியது. சென்னை கிளாம்பாகத்தில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு பேருந்து மறுநாள் காலை 6 மணிக்கு பம்பாவை சென்றடைகிறது.
இந்த சிறப்பு பேருந்து கூடுவாஞ்சேரி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், மறைமலை நகர் பேருந்து நிலையம், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு சுங்கச்சாவடி, செங்கல்பட்டு பைபாஸ், மேல்மருவத்தூர் பேருந்து நிலையம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளில் இருக்கைக்கு 1,190 ரூபாயும் படுக்கைக்கு, 15,40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் பம்பாவில் நவம்பர் 16 மாலை 3 மணி முதல் சிறப்பு பேருந்து இயக்கம் துவங்குகிறது.
மதுரையில் இருந்து குமுளி, செங்கோட்டை வழியாகவும், நெல்லையிலிருந்து செங்கோட்டை, நாகர்கோவில் வழியாகவும் பம்பாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அந்த பேருந்துகளில் முன்பதிவு இன்று துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.