200 தொகுதிகளில் வெல்வோம் எனக்கூறி மக்களை திமுக மூளைச்சலவை செய்வதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
200 தொகுதிகளில் வெல்வோம் எனக்கூறி திமுக மக்களை மூளைச்சலவை செய்து வருவதாக விமர்சித்தார். மேலும், நட்புணர்வுடன் தேமுதிக – அதிமுக இடையேயான கூட்டணி தொடர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.