தஞ்சாவூரில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,039 வது சதய விழாவையொட்டி நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 1,039 மாணவ – மாணவிகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039 வது சதய விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம், நாட்டியஞ்சலி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளில் அரசு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பல்வேறு இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 1,039 பேர் பெரிய கோவில் வளாகத்தில் மயிலாட்டம், பரதம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், குச்சிப்புடி உள்ளிட்ட நடனங்களை ஆடி மாமன்னன் ராஜராஜனுக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.