புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கியதில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றது தெரிய வந்துள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகமும், 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணமும் தவணை முறையில் வழங்கப்படும்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கடியாப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது போலி பயனாளர்களுக்காக வங்கிக் கணக்கை உருவாக்கி, அவற்றில் உதவித்தொகையை வரவு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடந்த 3 தினங்களாக தொடர்ந்து வரும் ஆய்வில், இதுவரையிலும் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றது சிறப்பு தணிக்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு தணிக்கை குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.