தமிழகத்திற்கு வரும் 18ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு வரும் 18ஆம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் விடிய விடிய கனமழை தொடர்ந்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ராயபுரம், ஆலந்தூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக பெருங்குடியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவானது. மேலும், மழை காரணமாக வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
அதேபோல் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில், ஆவடி பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிகளுக்கு சென்றனர்.