டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு மேல் கூடுதலாக வசூலித்தால் கடையில் பணிபுரியும் அனைவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, 20 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர், பேட்டியளித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத் தலைவர் பாரதி, ஒருவர் தவறு செய்தால் அனைவருக்கும் தண்டனை என்பதை ஏற்க முடியாது எனவும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் கூறினார்.