அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்றும், இதுதான் போலி திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து இருப்பதாகவும் மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாததை காட்டுகிறது.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோபமடையும் சூழல் தமிழகத்தில் உருவாகி வருவதை இந்த சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால், டார்ச் லைட் மற்றும் மொபைல் போன் வெளிச்சத்தில் 3 வயது குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் எந்த அவலத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. நிர்வாகத் திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே இந்த அரசு கவனம் செலுத்துகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், உலகில் எங்கும் இல்லாத ஆட்சி நடைபெறுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சுய தம்பட்டம் அடிக்கிறார்.
ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன? தமிழகத்தில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவுகிறது. தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், இது போலி திராவிட மாடல் ஆட்சி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
வெற்று வாய்ப்பந்தல் போடுவதை நிறுத்திவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு நிர்வாகத்திலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் அரசு மருத்துவரைத் தாக்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தங்கு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.