ஐசிசி சாபியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் செல்ல இந்தியா அணி மறுப்பது ஏன்? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி, இரு நாட்டு மக்களின் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒரு களமாக தான் பார்க்கப்படுகிறது. ஐசிசி ஒருங்கிணைந்த தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அதே வேளையில், இரு அணிகளுக்குமான கிரிக்கெட் தொடர்கள் கடந்த 16 ஆண்டு காலமாக நடத்தப்படுவதே இல்லை. ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் மோதும் வாய்ப்பு அமையும் போது மட்டுமே இரு அணிகளும் தங்களை பரிசோதனை செய்து கொள்கின்றன.
இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றாலே உலகப் போருக்கு ஒத்திகை நடப்பது போல தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்யப்படும். கிரிக்கெட் வர்த்தகம் பன்மடங்கு உயரும், அதே சமயம் பயங்கரவாதமும் தலை தூக்கும். இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாத சூழலுக்கு முதல் முக்கிய காரணமே இதுதான்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் நட்சத்திர விடுதியில் நடந்த பயங்கரவாத சம்பவத்தால் நாடே அதிர்ந்தது. இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் நட்புறவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் பயணிப்பதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதனால் தான் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கின்றது.
இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் அணி மறுக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் இரண்டாம் வாரம் வரை, பாகிஸ்தானின் லாகூர், ஆகிய நகரங்களில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. 16 ஆண்டு காலமாக இந்திய அணி பாகிஸ்தான் வருகை தராததால் இந்த முறை இந்தியா ஒரு வேலை பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டு விளையாடும் போது இந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய லாபகரமான தொடராக இருக்கக் கூடும்.
ஆனால் இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்காத பட்சத்தில் இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை பெற தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வராது, போட்டிகளை காண வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் வர மாட்டார்கள், உள்ளூரில் கூட அதிகப்படியாக டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறாது என பல சிக்கல்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்திக்க நேரும். இதனால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி வாயிலாக இந்தியாவுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தது. ஆனால் பேச்சு வார்த்தைகளும் சாதகமாக அமையவில்லை.
குறிப்பாக ஐசிசிக்கு மின்னஞ்சல் வாயிலாக பதில் அளித்துள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு பயணிக்கப் போவதில்லையென திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அந்த மின்னஞ்சலை அப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு திருப்பி அனுப்பிய ஐசிசி, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருந்த சாம்பியன்ஸ் கோப்பை திட்டமிடல் நிகழ்ச்சியையும் ரத்து செய்தது. முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் இந்திய அணி துபாய் போன்ற நாடுகளில் தங்கி இருக்கட்டும், போட்டிகளின் போது மட்டுமே தங்கள் நாட்டிற்கு இந்திய அணி விஜயம் செய்தால் போதும் என ஒரு ஆலோசனை வழஙகியது. ஆனால், இதையும் பிசிசிஐ ஏற்கவில்லை…
ஒருவேளை பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தும் முடிவை திரும்ப பெற்றால் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.