நீலகிரி மாவட்டம் உதகையில் 10 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். அப்பகுதியில் சுமார் 10 அடி ஆழத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய தடுப்பு சுவர்கள் ஏதுமில்லாமல் காணப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், அவ்வழியாக நடந்துசென்ற நபர் ஒருவர் தவறுதலாக கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி அந்நபரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.