சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 15 நாட்கள் வரை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவாரூரை சேர்ந்த வீரமணி, தனது தாய் ரஷ்யாவை, மூட்டுவலி சிகிச்சைக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்தார். உடனடியாக தாய்க்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கேன் மையத்துக்கு வீரமணி சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் 15 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வீரமணி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியும் 15 நாட்கள் வரை காத்திருக்கும் சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் ஸ்கேன் எடுக்க 35 நாட்கள் வரை ஆகும் என கூறுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.