டெல்லியில் தொடங்கிய முதல் போடோலாந்து மகோத்ஸவத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அஸ்ஸாமில் வசிக்கும் போடோ பழங்குடியின சமூகத்தினரின் கலாசார விழுமியங்களை பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் போடோலாந்து மகோத்ஸவம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டுகளித்தார்.
தொடர்ந்து போடோ இன மக்களின் பாரம்பரிய வாத்தியங்களை பிரதமர் மோடி வாசித்தார். நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா காணொலி வாயிலாக பங்கேற்றார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதையடுத்து, போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
போடோலாந்தை மேம்படுத்த மத்திய அரசு ஆயிரத்து ஐந்நூறு கோடி சிறப்பு நிதி விடுவித்ததாகவும், அஸ்ஸாம் அரசும் அதன் பங்குக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாகவும் பிரதமர் மோடி கூறினார்.