தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை சீரமைக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் தெரிவித்தார். இந்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என கூறினார்.
இதேபோல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தாமிரபரணி ஆற்றில் ஆங்காங்கே மண் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆற்று நீரில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்து இருந்தது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.