தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார் என கேள்வி எழுப்பியுள்ள சீமான், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் இல்ல காதணி விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
கஸ்தூரி கைது அவசியமற்றது. இதில் காயம் படவோ வேதனை படவோ ஒன்றுமில்லை. திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்க நினைக்கிறார்கள்.
அவர் பேசியதில் காயம் பட்டதாக சொல்கிறார்கள். நூற்றாண்டுகளாக தமிழ் பேரினத்தை திராவிடம் என சொல்லி வருகிறார்கள் நாங்கள் எவ்வளவு காயம் பட்டு இருப்போம்.
என்னுடைய அடையாளத்தை மறைத்து எனது இனத்திற்கு வேறு பெயர் வைக்க நீங்கள் யார்? அப்போது நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருப்போம். இதற்கெல்லாம் சிறைப்படுத்தும் அளவிற்கு ஒரு குற்றமா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
மன்னிப்பு கேட்ட பிறகு கைது எதற்கு? தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்? மலையை வெட்டி விற்றவன் எல்லாம் வெளியே சுற்றுகிறான் என சீமான் தெரிவித்தார்.