காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நகர் பகுதியில் உள்ள லெமர் வீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலை பணம் எடுக்கச்சென்ற நபர் ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற காரைக்கால் போலீசார், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேற்றப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
மேலும், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த சிசிடிவி கேமராவை கொள்ளையன் உடைத்துச் சென்றிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் மூலம் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார், சிசிடிவி-யில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாகூரைச் சேர்ந்த தனியார் உணவக ஊழியர் தவ்பீக் அகமது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததால், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மது அருந்த பணமில்லாமல் போதையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.