வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை நம்பி பாதை மாறிச்சென்று 7 மணி நேரம் சேற்றில் சிக்கித்தவித்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில், மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவிப்பதாக கர்நாடக காவல்துறை மூலம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், வத்தலகுண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டனர். போலீசாரின் விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த பரசுராமர் என்பது தெரியவந்தது.
ஐயப்ப பக்தரான அவர் சபரிமலைக்கு தனது மூன்று சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் வழியில், கூகுல் மேப்பை நம்பி வழிமாறிச் சென்று சுமார் 7 மணி நேரமாக சேற்றில் சிக்கித் தவித்தது போலீசாருக்கு தெரியவந்தது.
பின்னர் அவருக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய போலீசார், அவரை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு மாற்றுத்திறனாளி பக்தரை மீட்ட தமிழக போலீசாருக்கு கர்நாடக போலீசார் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.