நாமக்கலில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூனவேலம்பட்டி, புதூர், குறுக்குபுரம், சிங்களாந்தபுரம், மோளப்பாளையம் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் குறுக்குபுரம் கிராமத்திற்கு வருகை புரிந்தார்.
அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகியும், குறுக்குபுரம் பஞ்சாயத்து தலைவருமான கோவிந்தராஜ் உள்ளிட்டோர், பூமி பூஜை நடப்பது குறித்து தங்களிடம் தகவல் தெரிவிக்காதது ஏன் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கட்சிக்காக உழைக்கும் மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் நடந்து கொள்வதாக விழா ஏற்பாட்டர்களை குற்றம்சாட்டி பேசினர். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி மோதிக்கொண்டனர்.
சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால், நிகழ்ச்சியை புறக்கணித்து அமைச்சர் மதிவேந்தன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.