காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் ஊராட்சிமன்ற துணைத் தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏகனாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கணபதி என்பவர், பாமக இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவில் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மனைவி திவ்யா ஏகனாபுரம் ஊராட்சிமன்ற துணைத் தலைவியாக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். அண்மை காலமாக தங்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் அபகரிக்கப்பட இருப்பதை எண்ணி மன உளைச்சலில் இருந்து வந்த திவ்யா, அதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக்கிடந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய முற்பட்ட நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.