சீக்கிய மத நிந்தனைக்கான தண்டனை பெற்ற பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இது தொடர்பாக நரேன் சிங் சௌரா என்ற காலிஸ்தான் தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. சிரோமணி அகாலி தளம் ஆட்சியில், பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தார். அவரது மகனான சுக்பிர் சிங் பாதல், பஞ்சாபின் துணை முதல்வராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
2007ம் ஆண்டில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசியிருந்தார். சீக்கிய மதத்தை நிந்தனை செய்த, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவருக்கு, அப்போதைய துணை முதல்வரான சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகாலி தக்த் இந்த விவகாரத்தை விசாரித்தது. குற்றங்களை ஒப்புக்கொண்ட சுக்பிர் சிங் பாதல், அகாலி தக்த் முன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
விசாரணையில், பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல், 2015 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சர்கள் உட்பட சிரோன்மணி அகாலி தளத்தின் மையக் குழு உறுப்பினர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதை அடுத்து, அவருக்கு முன்பு வழங்கப்பட்ட “சீக்கிய சமுதாயத்தின் பெருமை” எனும் பட்டம் திரும்பப் பெறப்பட்டது.
கழிவறைகளை சுத்தம் செய்யவும், சமையலறையில் பணியாற்றவும்,பாத்திரங்களை சுத்தம் செய்யவும் தினசரி சீக்கிய பிரார்த்தனை செய்யவும் மற்றும் பக்தர்களின் காலணிகளை துடைக்கவும் உத்தரவிடப்பட்டது. தண்டனையின் அடிப்படையில் அவர்கள் கழுத்தில் பலகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
உடல்நலக் குறைவின் காரணமாக, சுக்பீர் பாதல் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோர் பொற்கோயில் வாசலில் இரண்டு நாள்களுக்கு வாயில் காப்பாளர்களாகப் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.
தண்டனையை ஏற்கும் விதமாக சுக்பீர் சிங் பாதல் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சக்கர நாற்காலியில் வந்தார். குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் தன் மாட்டிக்கொண்டு கையில் ஈட்டி ஏந்தியபடி பொற்கோயில் வாசலில் சேவகராக தண்டனையை நிறைவேற்றினார்.
மேலும், பஞ்சாப் முன்னாள் அமைச்சர்கள் பிக்ரம் சிங் மஜிதியா மற்றும் தல்ஜித் சிங் சீமா ஆகியோரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு தண்டனைகளை நிறைவேற்றினார்கள்.
ஒரு கையில் ஈட்டியை ஏந்தியபடி, நீல நிற சேவகர் சீருடையில், சக்கர நாற்காலியில் பொற்கோயில் வாசலில், தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காலிஸ்தான் தீவிரவாதி நரேன் சிங் சௌரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தேரா பாபா நானக் பகுதியை சேர்ந்த இவர், தீவிரவாதிகள் ஜக்தர் சிங் தாரா மற்றும் தேவி சிங் ஆகியோருடன் புரைல் சிறையில் இருந்து தப்பியது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது