சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்க்கும் செய்தி தான் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதியும் சினிமாவில் நடித்தவர் தான் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாலின சமத்துவம் வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்த போது கடவுளே அஜித் என சில மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுகவினர் ஏமாற்றி வருவதாகவும், துணை முதலமைச்சர் உதயநிதியும் சினிமாவில் நடித்தவர் தான் எனவும் விமர்சித்துள்ளார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பற்றி உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை என உதயநிதி கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதியும் சினிமா நடிகர் தான் என டிடிவி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரட்டை இலை சின்னத்தை காட்டி எடப்பாடி பழனிசாமி இனி மக்களை ஏமாற்ற முடியாது என்றும், அதிமுக பலவீனமாகி உள்ளது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.