கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதன் அடிப்படையில் 18 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது என அரசு தரப்பு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்று வந்ததாகவும், இதனால் பலர் மரணம் அடைந்ததால் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், கள்ளக்குறிச்சியில் இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்றால், மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினர்.
இறுதி விசாரணைக்காக கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.