நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக உறுப்பினர் பிரதாப் சந்திர சாரங்கி தலையில் காயம் ஏற்பட்டது.
மக்களவை கூடுவதற்கு முன்பாக இண்டி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் பிரச்னையை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்துக்குள் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சென்றபோது சக எம்.பி. ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதில், பாஜகவை சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி மீது அவர் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் பிரதாப்பின் தலையில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக மற்ற எம்.பி.க்கள் அவரை கைத்தாங்கலாக இருக்கையில் அமர வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினர். இதனிடையே, தாம் படிக்கட்டு அருகே நின்றபோது ராகுல் காந்தி, எம்.பி. ஒருவரை தன் மீது தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி கூறினார்.
நாடாளுமன்ற அமர்வு தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதற்கு விளக்கமளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தாம் நாடாளுமன்ற நுழைவுவாயில் வழியாக உள்ளே சென்றபோது பாஜக எம்.பி.க்கள் தன்னை தடுத்ததாகவும், அதனால் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றதாகவும் கூறினார்.