நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என கேரள மாநில அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் மைய மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி, கோடகநல்லூர் மற்றும் கொண்டா நகரம் பகுதிகளில் டன் கணக்கில் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு முக்கிய ஏஜென்ட் ஆக செயல்பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளுக்கும் கேரள அரசு பொறுப்பு ஏற்று, உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் சுத்தமல்லி, பழவூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேரள அதிகாரி ஒருவர், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மாநில மருத்துவ கழிவுகளால் எந்த அபாயகரமான சூழலும் இல்லை என்று அலட்சியமாக பதில் அளித்தார்.