சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவருடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த சிலர், அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் கல்லூரி மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்த நபர்களா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக, விடுதி வாயில் மற்றும் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ,கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், 3 தனிப்படைகள் அமைத்து பிற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.