வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.
பஞ்சாபின் கா என்ற பகுதியில் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தவர் மன்மோகன் சிங்.
பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பஞ்சாப் பல்கலையிலும் , டில்லி பல்கலையிலும் பணியாற்றினார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.
இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றிய மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல் 1985 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
1985 முதல் 1987ம் ஆண்டு வரை திட்டக்குழு துணைத்தலைவராக பதவி வகித்தார்.
1990 ஆம் ஆண்டு முதல் 91ம் ஆண்டு வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் பதவி வகித்தார் மன்மோகன் சிங். 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.
2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக 10 ஆண்டுகள் பதவி வகித்தார் மன்மோகன் சிங். 92 வயதான மன்மோகன் சிங் கவலைக்கிடமான நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.