தாம்பரம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், இளைஞர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள மப்பேடு பகுதியில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு சென்ற சேலையூர் போலீசார் முகத்தில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தி பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் மப்பேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பதும், அவர் வாய்பேச முடியாதவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இந்நிலையில், சூர்யா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறால் நடந்த கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.