பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்த முடிவை ஆளுநரே எடுக்கலாம் என யுஜிசி வரைவு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
துணை வேந்தர், பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனம் குறித்த வரைவு அறிக்கையை, திங்கள்கிழமை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
அதில் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரே நியமனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. துணை வேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையை சாராத தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த வல்லுநர்களையும் துணை வேந்தர்களாக நியமனம் செய்யலாம் என இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய விதிமுறைகளில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநர் சார்பில் ஒருவர், பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் மற்றும் மாநில அரசு சார்பில் ஒருவர் என மொத்தம் மூவரை நியமிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
ஆனால், புதிய விதிகளின்படி மாநில அரசு, தேடுதல் குழுவில் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் இந்த வரைவு அறிக்கைக்கான கருத்துக்களை இ-மெயில் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.