சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையை யொட்டி, ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதனையொட்டி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் வலியகோயிக்கல் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்பட்டு, வரும் 14 -ம் தேதி மாலை சன்னிதானத்தை சென்றடைகிறது.
அப்போது, சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், சன்னிதானம் வரும் திருவாபரணத்தை தந்திரிகள் பெற்றுக் கொண்டு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிப்பர்.
பின்னர், பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம் நடைபெறும். வரும் 19 -ம் தேதி வரை சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 20 -ம் தேதி பந்தள ராஜ குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்த பின்னர், கோயில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நிறைவடைகிறது.