உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இந்நிலையில் காந்திமதிக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், நிற்க முடியாமல் யானை படுத்த படுக்கையானது.
தொடர்ந்து கிரான் மூலம் யானையை தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், காந்திமதியால் நிற்க முடியவில்லை. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் குழு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை உயிரிழந்தது.
காந்திமதி உயிரிழந்ததைஅடுத்து நெல்லையப்பர் கோயில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு மோட்ச கால பூஜைகள் நடைபெற்ற நிலையில், யானை உடல் அருகே அமர்ந்து அதன் பாகன் கதறி அழுதார். இதை தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த திரளான மக்கள், காந்திமதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யானை உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், உயிரிழந்த காந்திமதி யானைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் அனைத்தும் நிறைவுபெற்ற பின் யானை கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது அமைச்சர் கே.என்.நேரு யானைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்திய நிலையில், வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடிநின்று யானைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து யானையின் உடல் தாமரைகுளம் மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.