ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2023ஆம் ஆண்டு தமிழக பாஜக கடிதம் எழுதி 22 சதவீத ஈரப்பத நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதி பெற்றுத் தந்ததாக கூறியுள்ளார்.
ஆனால், திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளைக் காக்க வைத்து கடிதம் எழுதுகிறோம் என்ற பெயரில் நாடகம் ஆடிக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள் 3 கோடி ரூபாய் நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நெல் உலர்த்தும் இயந்திரம் வாங்கித் தராதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் எதிர்கொள்ளும் ஈரப்பத பிரச்னை இந்தாண்டே இறுதியாக இருக்கட்டும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, டெல்டா மாவட்ட எம்எல்ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி விவசாயிகள் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.