டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியதாலும், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துவருவதாலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருக்கும் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
மேலும் தொடர்ந்து பெய்யும் பனிப்பொழிவால் நெல்லை உலர வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 17 சதவிகித ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை 22 சதவிகித ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் மாநில அரசின் அதிகாரிகளோடு இணைந்து நெல்மணிகளை பார்வையிட 4 அதிகாரிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆய்வுக்கு பின் அதிகாரிகள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.