டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் முதல் க்யூஆர் கோடு முறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கானது நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த நிலையில், சில ஊழியர்கள் செய்யும் தவறுக்காக அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் க்யூஆர் கோடு ஸ்கேன் மூலமே மது வாங்க முடியும் எனவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.