அனைத்து இந்து சமுதாயமும் ஈம காரியங்கள் செய்யும் இடத்தை, மத ரீதியாக மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் நசுக்கப் பார்ப்பதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், மேட்டுப்பாளையத்தில் இந்துக்கள் ஈம காரியங்கள் செய்யும் இடமான அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தை நகராட்சி நிர்வாகம் மத ரீதியாக நசுக்கப் பார்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.
ஈம காரிய இடம் தொடர்பாக கடந்த நகர்மன்ற கூட்டத்தில் புதிய விதிகளை ஏற்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 31ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.