அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, உலக நாடுகள் வியக்கும் வண்ணம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டிருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தனது 78 வயதில் அபார வெற்றி பெற்றார். அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதிபராகப் பதவியேற்ற பின் உரையாற்றிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கி விட்டதாகவும், இதுவரை இல்லாத அளவில் வலிமையுடையதாக அமெரிக்கா மாறும் என்றும், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றவே, கடவுளால் துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
தான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்பதை தெளிவாகச் சொல்லிய அதிபர் ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் “எதிர்காலம்” எப்படி இருக்கும் என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார்.
பின்னர், அதிபராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே சுமார் 100 க்கும் மேற்பட்ட நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு, உலகையே வியக்க வைத்திருக்கிறார் ட்ரம்ப். அவற்றில் பல முன்னாள் அதிபர் ஜோ பைடனின் 78 கொள்கை முடிவுகளை ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
2021 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியைத் தனது முதல் கையெழுத்தின் மூலம் அதிபர் ட்ரம்ப் நிறைவேற்றி இருக்கிறார்.
அந்த கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 1,500 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் கைவிடும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
நாட்டின் கடனைக் குறைப்பதற்கும் அரசு செலவுகளைக் குறைப்பதற்கும் உருவாக்கிய அரசு செயல்திறன் துறையை (D.O.G.E.) நிறுவுவதற்கான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அரசாங்க ஊழியர்கள் அனைவரும் உடனடியாக நேரில் முழுநேரப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவிலும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவிலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த முடிவு புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடும் முயற்சிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டிரம்ப் தனது பதவியேற்பு உரையின் போது, ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் உத்தரவை அதிபர் பிறப்பித்திருக்கிறார். மேலும் திருநங்கைகளை பெண்கள் இனப் பட்டியலிலிருந்து நீக்கும் உத்தரவிலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதாவது,பள்ளிகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் திருநங்கைகள் பணியாற்ற்ற முடியாது. குறிப்பாக, பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகள் போட்டியிடுவதையும் இந்த உத்தரவு தடை செய்கிறது.
அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவரும் அமெரிக்க குடிமகன் என்ற 150 ஆண்டு பழமையான அமெரிக்க அரசியல் சாசன சட்ட உரிமையை ‘அபத்தமானது’ என்று கூறிய டிரம்ப், அதிபராகும் முதல் நாளிலேயே அகற்ற போவதாக தெரிவித்திருந்தார். இப்போது, பிறப்புரிமைக் குடியுரிமையை நீக்கும் உத்தரவிலும் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் பேச்சு சுதந்திரம் மீது அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கும் உத்தரவையும் , தடைசெய்ய பட்ட டிக்டாக் செயலி இன்னும் 90 நாட்களில் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் புதிய உத்தரவையும் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
இதுதவிர, மெக்சிகோ வளைகுடாவுக்கு, அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்ற உத்தரவை பிறப்பித்துள்ள அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா – மெக்சிகோ எல்லைகளில் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார்.
இந்த எமர்ஜென்சி உத்தரவின் மூலம், எல்லையில் ஆயுதமேந்திய ராணுவ வீரர்களை நிலைநிறுத்த படுவார்கள் என்றும் மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுத்து நிறுத்தி, உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் தீவிரவாத குற்றமாக கருதும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் குழுக்கள் அனைத்தும், அல்கொய்தா ஐஎஸ், ஹமாஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு இணையாக கருதப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ நுழைவை வழங்கிய ஜோ பைடனின் கால எல்லைப் பயன்பாடான CBP One செயலியையும் அதிபர் ட்ரம்ப் ஓரே கையெழுத்தில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
அதேபோல், பணவீக்கம் மற்றும் எரிசக்தி விலைகளைக் கட்டுக்குள் வைக்கும் வகையில், தேசிய எரிசக்தி அவசரநிலை பிரகடனத்தை அறிவித்த அதிபர் ட்ரம்ப், மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற முந்தைய ஆட்சியின் உத்தரவை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதாக தாம் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும்,பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கு கரையை ஆக்கிரமித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக முந்தைய அரசால் இஸ்ரேல் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ளும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கூடுதலாக, தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கருப்பு பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் உறுதியளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.