மதுரை மாட்டுத்தாவணி தற்காலிக காய்கறி சந்தையில் மலைபோல் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே தற்காலிக காய்கறி சந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும், 800-க்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும் அந்த பகுதியில் சாலை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லையென்று கூறப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் புதிய தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு வாகனம் மூலம் மட்டும் கழிவுகள் அகற்றப்படுவதாக தெரிகிறது.
இதனால், கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.