மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டங்ஸ்டன் சுரங்கம் அமைவதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படவிருக்கும் இன்னல்கள் குறித்து தமிழக விவசாய குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தெரிவித்ததை மேற்கொள் காட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சி என்றுமே விவசாயிகளுக்கான ஆட்சியாகவும், அவர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளும் ஆட்சியாகவும் இருக்குமென்று, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தமிழக விவசாயிகள் குழுவினருக்கு வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டியுள்ள எல்.முருகன்,
டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் செயல்களில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசிற்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.