வேங்கைவயல் வழக்கில் விசாரணையை முடித்து 3 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேங்கைவயல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனை மறுத்த தமிழக அரசு, வழக்கு விசாரணை முடிவடைந்து 3 பேருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தது. மேலும், குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டதாக கூறி அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.