வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் விதிகளை மீறி கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்டது.
இந்நிலையில், வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த கூட்டுக்குழு கூட்டம், அதன் தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அரசுக்கு எதிராகவும், கூட்டுக்குழு தலைவருக்கு எதிராகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு ஜெகதாம்பிகா பால் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
அப்போதும் எதிர்ப்பு கோஷத்தை அவர்கள் நிறுத்தாததால், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
காங்கிரஸை சேர்ந்த சையத் நசீர் உசேன், இம்ரான் மசூத், முகமது ஜாவேத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி, திமுகவின் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து கூட்டுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.