ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட தொடங்கி உள்ளதாகவும், அதனால், பூமியில் ஆறாவது பெருங்கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் மிக மிக அரிதாக நடக்கும் இந்த சம்பவத்தால், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அறிவியல் ஆய்வுகளின் படி, நில அடுக்குகளின் நகர்வுகள் காரணமாக பூமியின் நிலப் பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெவ்வேறு நிலப்பரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் விளைவாகவே, உலகில் 7 கண்டங்கள் உருவாகின.
ஒரு நில அடுக்கு பிரிந்து இரண்டாக, மூன்றாக அல்லது அதற்கும் மேலாக மாறுவது ரிப்ட் (Rift) எனப்படும். அதாவது ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவதாகும் . இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, மாறிவிடும்.
இரண்டு தட்டுகள் நகர பல்லாயிரம் ஆண்டுகள் எடுக்கும் என்றாலும், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் Rift வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் அதிகம். தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த ரிப்ட் ஏற்பட்டு உள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, குறைந்தது 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கடந்த 25 ஆண்டுகளாக, நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிளவு பட்டு வருகிறது. 2005 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் சுமார் 56 கிலோ மீட்டர் அளவுக்கு விரிசல் தோன்றியது.
ஆண்டுக்கு ஒரு அங்குலம் என்ற அளவில், அந்த விரிசல் விரிவடைந்து வருவதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது பெருங்கடல் உருவாகும் என்று கூறப்படுகிறது.
டெக்டோனிக் தட்டுகள் ஒருவருக்கொருவர் விலகிச் செல்வதால், நிலப்பரப்பில் விரிசல் ஏற்படுவதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்கன் நியூபியன் (African Nubian), ஆப்பிரிக்கன் சோமாலி (African Somali), அரேபியன் (Arabian) ஆகிய மூன்று நில அடுக்குகள் ஏற்கெனவே நகரத் தொடங்கி விட்டன. இவை செயற்கைக்கோள்களால் மட்டுமின்றி, சாதாரண கண்ணுக்கு தெரியும் வகையில், விரிசல் அதிகமாகி உள்ளது.
தற்போதைய வேகத்தில் இந்த விரிசல் தொடருமா என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கும் விஞ்ஞானிகள், செங்கடல் போன்ற ஒரு பெருங் கடல் உருவாகலாம் என்று கணித்துள்ளனர். அடுத்த 50,000 ஆண்டுகளுக்கு இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை என்றும் அது கொஞ்சம் கொஞ்சமாகவே நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது நடக்க குறைந்தது இன்னும் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறும் விஞ்ஞானிகள், சோமாலியா மற்றும் எத்தியோப்பியா, கென்யா மற்றும் தான்சானியாவின் முக்கால்வாசி பகுதிகள் அடங்கிய ஒரு புதிய கண்டம் உருவாகும் என்றும் கூறியுள்ளனர். அது உலகின் 8வது கண்டமாகும்.
இந்த ஆப்பிரிக்காவில் நடக்கும் ரிப்ட் காரணமாக, ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரு பகுதி இந்தியாவின் அரபிக்கடல் பகுதியில் இருக்கும் நிலப் பகுதியோடு மோதும்.
இதனால், அரபிக் கடலில் புதிய மலைகள் உருவாகும். அதன் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறும். இந்த நில பரப்பில் மாற்றங்கள் ஏற்பட பல லட்சம் ஆண்டுகள் ஆகும்.
ஏதாவது மிகப்பெரிய நிலநடுக்கம், மிகப்பெரிய சுனாமி எல்லாம் ஒரே நாளில் ஏற்பட்டால் மாற்றங்கள் திடீர் என்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.