வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்களே சிபிஐ விசாரணை கோரியிருப்பது சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் இடதுபுறம் உள்ளடங்கியிருக்கிறது முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமம். பட்டியலின மக்கள் வசிக்கும் அக்கிராமத்தில்பயன்பாட்டில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
நூற்றுக்கும் அதிகமானவர்களிடம் விசாரணை, உண்மை கண்டறியும் சோதனை, 50க்கும் அதிகமானவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை என பல்வேறு கட்ட விசாரணை நடத்தியும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் உண்மையான குற்றவாளிகளை நெருங்க முடியாத சூழலே நிலவியது. இதற்கிடையில் அரசுக்கு நெருக்கடி அதிகரிக்க, ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஒருநபர் ஆணையமும் அமைத்து விசாரிக்கப்பட்ட நிலையிலும் குற்றவாளிகளை கண்டறிய முடியாததால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சண்முகத்தை பணிநீக்கம் செய்ததால், அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு, குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய்த் தகவலை பரப்பியதாகவும், அதன் பின்னர் குடிநீர் தொட்டி மீது ஏறி முத்துக்கிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்றச் செயல்களில் ஈடுப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி மீது மலப் பையுடன் சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் உள்ள வீடியோவும், செல்பி எடுப்பது போல புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதர்சன் அவரது தாய் மற்றும் உறவினருடன் பேசும் தொலைபேசி உரையாடலும் கசிந்திருக்கிறது.
இந்த வீடியோ மற்றும் தொலைபேசி உரையாடல் குறித்த உண்மைத் தன்மை இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத போட்டோவும் வீடியோவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் வெளியானது எப்படி ? மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களே எப்படி குற்றவாளிகளாக இருக்க முடியும்? உண்மைக் குற்றவாளிகளை பாதுகாக்க இதுபோன்று குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளதா? சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் வேறு வழியின்றி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எழுந்துள்ளன.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை உண்மைக் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இருப்பதாக கூறியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணையிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதே கருத்தையே திமுக கூட்டணியில் இருக்கும் மற்றொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக அரசை வற்புறுத்தியுள்ளது.
வழக்கின் விசாரணை ஆரம்ப நிலையில் இருந்தே பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை நோக்கியே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் விமர்சனம் செய்துவந்த நிலையில், தற்போது அந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மீதே குற்றமும் சுமத்தப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகங்களும் கேள்விகளுமே மட்டுமே நிரம்பிய வேங்கைவயல் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைப்பதே உண்மைக்குற்றவாளிகளை கண்டறிய ஒரே வழி என அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.