இந்தியா – இந்தோனேசியா இடையிலான கூட்டு முயற்சிகள் இரு நாடுகளுக்கிடையே உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்திற்கு சென்ற அவரை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
தொடர்ந்து ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரிக்ஸ் அமைப்பில் இந்தோனேசியாவை உறுப்பினராக சேர்க்க ஆதரவு தெரிவித்த இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா இந்தோனேசியா இடையிலான கூட்டு முயற்சிகள் இரு நாடுகளுக்கிடையே உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார்.
இந்தியாவின் பல திட்டங்களை கற்றறிந்த அனுபவத்தை வைத்து பல திட்டங்களை இந்தோனேசியா செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், இன்றைய ஆலோசனை கூட்டத்திலும் சுற்றுலா, சுகாதாரம், பாதுகாப்பு, டிஜிட்டல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தோனேசியா தரப்பில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.