அமெரிக்காவில் பிறக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்பின் முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டி குவியும் இந்திய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் நிர்வாக ரீதியாக பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் 14-வது திருத்தத்தில் டிரம்ப் மாற்றங்கள் கொண்டு வந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்படி, பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்பதால், அதற்கு முன்பே குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் பலர் அங்குள்ள மருத்துவமனைகளை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
H1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய பெண்கள், அதிலும் குறிப்பாக மகப்பேறு காலத்தின் 8-வது மற்றும் 9-வது மாதத்தில் உள்ளவர்கள், தங்கள் அறுவை சிகிச்சைகளை பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன் நடத்துமாறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய், சேய் ஆகிய இருவருக்கும் வரப்போகும் ஆபத்தை உணராமல் இந்திய பெற்றோர்கள் பலர், மகப்பேறுக்கு முந்தைய கால அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவசரப்படுத்துவதாகவும் அமெரிக்க மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க குடியுரிமை நிராகரிப்பு குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சமே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
அறுவை சிகிச்சை கோரிக்கைகளுடன் மருத்துவமனைகளை அணுகும் தம்பதிகளிடம் குறை பிரசவத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருவதாக கூறும் மருத்துவர்கள், ஒரு சிலர் தங்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ளும் மன நிலையில் கூட இருப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.