நெல்லையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மகன் அரசு மருத்துவமனையில் இருந்து சைக்கிளில் கட்டி 15 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மீனவன் குளத்தைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள். கணவரை இழந்த இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மற்ற அனைவருக்கும் திருமணமாகி அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களில் வசித்து வரும் நிலையில், திருமணமாகாத இவரது கடைசி மகன் ஏசுபாலன், தாய் சிவகாமியம்மாளுடன் தங்கி அவரை கவனித்து வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் தலையில் பலத்த காயமடைந்த ஏசுபாலனுக்கு அவ்வப்போது மனநல பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏசுபாலன் வேலைக்கு ஏதும் செல்லாமல் தாயின் அரவணைப்பிலேயே இருந்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் சிவகாமியம்மாளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஏசுபாலன் அவரை தனது சைக்கிளில் அமரவைத்து நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிவகாமியம்மாளை மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி ஏசுபாலன் அவரை சில தினங்களுக்கு முன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
ஜனவரி 23-ம் தேதி சிவகாமியம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய்க்கு அருகிலுள்ள டீக்கடையிலிருந்து ஏசுபாலன் டீ வாங்கிக்கொடுத்துள்ளார். அதை உட்கொண்டபோது எதிர்பாராத விதமாக சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில், தாயை ஊருக்கு எப்படி அழைத்துச் செல்வது என தெரியாமல் ஏசுபாலன் தவித்துள்ளார்.
உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் ஏசுபாலன் தனது சைக்கிளின் பின்னால் தாயை அமரவைத்து கட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து சைக்கிளை தள்ளியபடி நடந்தே 15 கி.மீ தொலைவுள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
நெல்லை – கன்னியாகுமரி நான்குவழிச்சாலை வழியாக மூன்றடைப்பு அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஏசுபாலனை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.
அவர் கூறிய தகவலின் பேரில் நெல்லை அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தை தொடர்புகொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வந்த சிவகாமியம்மாளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து வாகனம் மூலம் சிவகாமியம்மாளின் உடலை போலீசார் மீட்டு மீண்டும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகாமியம்மாளின் மற்ற உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சிவகாமியம்மாளின் உடல் அவரது மூத்த மகனான சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே மூதாட்டி மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், உரிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு மருத்துவமனை நிர்வாகம் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற செயல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.