தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் அமெரிக்க தொழில் நுட்பத்திலான அதிநவீன இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியதில் கோபுர கலசம் சேதமடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களின் ராஜகோபுரங்களில் அதிநவீன இடிதாங்கி அமைக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது.
அதன் பேரில் தமிழகத்திலேயே முதல்முறையாக இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில், அமெரிக்க தொழில் நுட்பத்தில் உருவான அதிநவீன இடிதாங்கி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அதிநவீன இடிதாங்கி ராஜகோபுரத்தை சுற்றி 80 மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு அளிக்கக்கூடியது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.