அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ராமநாதபுரத்திலுள்ள முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன், அந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி கருங்குளம், கோழிப்பத்தி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது தேர்தல் விதிகளை மீறி அவர் திமுக கொடிக்கம்பங்களை நட்டு, தோரணங்களை கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி சிவகங்கையிலுள்ள மானாமதுரை தொகுதியில், திமுக வேட்பாளர் தமிழரசிக்கு ஆதரவாக ராஜகண்ணப்பன் பிரச்சாரம் செய்தார்.
அப்போதும் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரத்திற்கு 15 வாகனங்களில் வந்ததாகவும், பட்டாசுகள் வெடித்ததாகவும் சாலைகிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த இரு வழக்குகளும் அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து, வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி வேல்முருகன் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அப்போது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததுடன், 3 வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.