சேலம் அருகே கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரிசிபாளையத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வெள்ளி பட்டறை தொழில் நடத்தி வந்தார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றை பால்ராஜ் கட்டினார். இதற்காக தனியார் வங்கியிலும், தனி நபர்கள் சிலரிடமும் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில், அவரால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் பால்ராஜூக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பால்ராஜ், மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கடன் தொகையை வசூலிக்க பால்ராஜ் வீட்டுக்கு வந்த தனியார் வங்கி அதிகாரிகள், நிலைமையை உணர்ந்து அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.