கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை தடுக்காத, அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா உள்ளிட்ட எல்லைப்பகுதிகள் வழியாக வரும் வாகனங்கள் மூலம், மருத்துவக் கழிவுகள் கொண்டு வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், அருமனை வழியாக கோழிக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்த வாகனத்தை பொது மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் மீது மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், விசாரணை நடத்திய எஸ்.பி., கங்கைநாத பாண்டியனை, ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.